வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைந்த வட்டியில் கடன்

நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்க வங்கிகளின் ஊடாக நூற்றுக்கு 6.25 வீத வட்டிக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தக் கடன் தொகையை 30 வருடங்களில் மீண்டும் செலுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதியான சர்வதேச வீட்டுத்தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

“அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு” வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றது.

வீடு அவசியம் இருப்பினும் அதனை தனியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமை என்பது பெரும்பான்மையினரின் சிக்கலாகும். நகர, கிராம மற்றும் தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினையை அவர்களின் வாழ்வாதார மட்டத்தை உயர்த்தும் மட்டத்திலேயே தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுக்கான வீடு, நாட்டிற்கு எதிர்காலம்” என்ற கருப்பொருளின் கீழ் கிராம சேவகர் மட்டத்தில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 14,022 வீடுகளை தனது அமைச்சகம் ஏற்கனவே நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திகா அனுருத்த தெரிவித்துள்ளார்.

அந்த திட்டத்தின் கீழ் 5 வருட நிறைவில் 70,100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like