சீன பொறியியலாளரை தாக்கி, பெறுமதியான பொருட்கள் கொள்ளை

மாத்தறை – பொலியத்தைக்கு இடையிலான புதிய தொடருந்து பாதையின் நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சீன பொறியியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சீனர்களுக்கு சொந்தமான அலுவலகத்திற்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் அங்குள்ள அறை ஒன்றுக்குள் சென்று சீன பொறியியலாளரை தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளதுடன் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த சீன பொறியியலாளர் ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது.

சீன பொறியியலாளர் உறங்கிக் கொண்டிருந்த அறையில் இருக்கும் கழிவறையின் கூரையின் ஊடாக கொள்ளையர்கள் அறைக்குள் நுழைந்துள்ளனர்.

நித்திரையிலிருந்து விழித்த சீன பொறியியலாளர் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளையர்களை அவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு கொள்ளையரை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனைய இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like