அக்கராயனில் தொடரும் மணல் அகழ்வு : கட்டுப்படுத்த பொது அமைப்புகள் முடிவு

கிளிநொச்சி, அக்கராயனில் தொடரும் மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்கராயனில் தொடரும் மணல் அகழ்வுகளில் பொது அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்புபட்டிருந்ததன் காரணமாக, பொது அமைப்புகளால் வெளிப்படைத் தன்மையுடன் இயங்க முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில், அக்கராயன் மத்தி, கிழக்கு, மேற்கு, கெங்காதரன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் புனரமைக்கப்பட்டு புதிய நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நிர்வாகத்தினர் ஒன்றுகூடி, அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொது அமைப்புகள் வெளிப்படையாகச் செயற்பட்டு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை அதிகாரிகளிடம் அடையாளப்படுத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.

இதேவேளை, “அக்கராயன் கிழக்கின் ஆற்றுப்பகுதி, நீர் வாய்க்கால்களின் நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதாகவும் அக்கராயன் திருமுறிகண்டி வீதி வழியாகவும் ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வழியாகவும் நாள்தோறும் சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகின்றன” என,  கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like