பெருகும் சீர்கேடுகள்! மாணவர்களின் கைகளில் ஸ்மாட் போன்கள் எதற்கு?

சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் தொடர்பாக இலங்கை மக்கள் விழிப்படைய வேண்டிய காலகட்டம் வந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் கல்வியியலாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

சமூக வலைத் தளங்களின் பயன்பாடு காரணமாக நாட்டில் சமூக சீர்கேடுகள் மோசமாக அதிகரித்து வருவதன் காரணமாகவே இவ்விடயமானது சமூகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.

மட்டக்களப்புப் பிரதேசத்தில் கடந்த வாரம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்பெண் தொடர்பாக முகநூலில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும், அதனால் உண்டான அவமானம் காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் காரணமாக எமது சமூகத்தில் உருவாகி வருகின்ற பாரதூரமான பிரச்சினைக்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

முகநூல் பாவனை காரணமாக எமது இளைஞர், யுவதிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் தொடர்பாக ஒருசில தகவல்கள் மாத்திரமே வெளிவருகின்றன. ஏராளமான தகவல்கள் வெளிவராமலேயே அமுங்கிப் போகின்றன.

முகநூல் தொடர்பினால் ஏற்படுகின்ற சமூக சீர்கேடுகளில் பாலியல் ரீதியான குற்றச் செயல்களே அதிகளவில் காணப்படுகின்றன.

ஒருவரின் அந்தரங்கங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதால் ஏற்படுகின்ற இழுக்கு, மன அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சிலரின் வாழ்வே பாழாகிப் போயுள்ளது.முன்பின் அறிமுகமில்லாத யாரோ இருவரை நேரடியாகத் தொடர்புபடுத்தும் இலகுவான கைங்கரியத்தை சமூகவலைத்தளங்கள் ஆற்றுகின்றன.

இளைஞர், யுவதிகளே சமூகவலைத்தளங்கள் மீது அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர். முகநூல் வாயிலாக இளைஞர்களும் யுவதிகளும் மிக இலகுவாகவே தொடர்பு கொள்வதற்கான பாதை திறந்து விடப்படுகின்றது.

இளைஞர், யுவதிகளுக்கு முகநூல் மீது ஏற்படுகின்ற ஈர்ப்புக்குக் காரணமாக எதிர்பால் கவர்ச்சியையும் கூற முடியும்.முன்பின் அறிமுகமில்லாத ஒருவரின் பின்புலம் எவ்வாறிருக்குமென்பது எமக்குத் தெரிவதில்லை.

எமது சமூகத்தில் நல்லவர்களெனக் கூறக் கூடியோர் எத்தனை பேர் உள்ளனரோ, அதனை விடக் கூடுதலானோர் தீயவர்களாகவே உள்ளனர்.

மற்றையோருக்குத் தீங்கிழைப்பதையே சுபாவமாகக் கொண்டோரின் எண்ணிக்கையே உலகில் அதிகம் எனலாம்.ஆனால் நல்லவர்களையும் தீயவர்களையும் கூட சமூக வலைத்தளங்கள் இணைத்து விடுகின்றன.

இவ்வாறான தவறான தொடர்புகளால் இளைஞர்களைப் பார்க்கிலும் யுவதிகளே கூடுதலாகச் சீரழிக்கப்படுகின்றார்கள். காதல் என்ற போர்வையில் சிக்கலுக்குள் வீழ்ந்த பலரின் எதிர்காலமே சின்னாபின்னமாகிப் போயுள்ளது.

இளைஞர், யுவதிகள் பலர் தங்களது நற்பெயரையே கெடுத்துக் கொண்டுள்ளார்கள்.சமூக வலைத் தளங்கள் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கல்விச் சமூகம் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வருகின்ற போதிலும் பெற்றோர் மத்தியில் இன்னுமே விழிப்புணர்வு ஏற்படுவதாக இல்லை.

மாணவர்களின் கைகளில் ஸ்மாட் போன்களை பெற்றோர் வாங்கிக் கொடுப்பதற்கான காரணம் என்னவென்பதை அறிய முடியாதிருப்பதாக கல்விச் சமூகத்தினர் கூறி வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஸ்மாட் போன்களை வாங்கிக் கொடுப்பதன் வாயிலாக சமூக சீரழிவுகளுக்கு பெற்றோர் வழியைத் திறந்து விடுகின்றனரென்பது பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது.

கையில் ‘ஸ்மாட்போன்’ இல்லாத மாணவர்களை இப்போதெல்லாம் காண்பது அரிது. ஒரு கையில் பாடப்புத்தகமும், மறுகையில் ஸ்மாட்போனுமாக அவர்கள் வீதியில் நடமாடுவது சாதாரண காட்சியாகும்.

இளைஞர்கள் இப்போதெல்லாம் மனிதர்களுடன் நேருக்குநேர் பேசுவதை கூடியளவில் தவிர்த்து வருகின்றனர். கருவியுடனேயே அவர்கள் பேசுகின்றனர், பழகுகின்றனர்.

மக்களுடனான நேரடித் தொடர்பு இல்லாமல் போன நிலையில், தொலைபேசிக் கருவியென்பதே அவர்களுக்குத் துணையாகிப் போயுள்ளது.

கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழிக்கின்ற கைத்தொலைபேசிப் பாவனையிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கின்ற காரியத்தையே பெற்றோர் இப்போது செய்ய வேண்டியிருக்கின்றது.

மாணவர்கள் முகநூலுக்கு அடிமையாகிப் போவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகும்.

கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது மேற்குலகத்தில் ஆகும். ஸ்மாட்போன் உட்பட அத்தனை நவீன சாதனங்களின் கண்டுபிடிப்பாளர்களும் மேற்குலகத்தினராவர். ஆனால் ஸ்மாட்போன் போன்ற நவீன சாதனங்களுக்கு மேற்கு நாட்டவர்கள் இன்னுமே அடிமையாகி விடவில்லை.

கைத்தொலைபேசியை இயக்கியபடி மேற்கு நாடுகளின் வீதியில் அம்மக்கள் நடமாடுவதை எம்மால் காண முடிவதில்லை. கைத்தொலைபேசியில் உரையாடியபடி சென்றதால், வீதியில் வாகனங்களில் அவர்கள் மோதுண்ட செய்தியையும் நாம் அறிந்திருக்கவில்லை.

தொலைபேசியில் உரையாடியடி ரயில் பாதையினால் சென்று ரயிலில் மோதுண்டு இறந்த செய்தியையும் மேற்கு நாடுகளில் நாம் கேள்வியுற்றதில்லை.இலங்கை போன்ற நாடுகளிலேயே இவ்விதமான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

வீதிவிபத்துகள், ரயிலால் மோதுண்டு மரணமடையும் சம்பவங்கள், சமூக சீர்கேடுகள் போன்ற அத்தனை காரியங்களும் இங்குதான் இடம்பெறுகின்றன. ‘ஸ்மாட்போன்’ மூலம் ஏற்படுகின்ற அவலங்கள் உண்மையில் இங்கு பெருகித்தான் போய் விட்டன.

இது தொடர்பாக இளைஞர், யுவதிகளை அறிவுறுத்தும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் அவலங்கள் தொடரவே செய்கின்றன.

சமூகவலைத்தளம் என்பது சமூகச் சீர்கேட்டுக்கான நுழைவாயில் ஆகி விட்டதால், எமது சமூகம் விழிப்படைய வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.

You might also like