கிளிநொச்சி முழங்காவில் பொலிஸாரை இடம்மாற்ற வேண்டும் : பொது மக்கள்

கிளிநொச்சி முழங்காவில் கிராமத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதில் பொலிஸார் காட்டும் அசமந்தப் போக்குகளும் குற்றம் புரிபவர்களுடன் பொலிஸாருக்கு உள்ள தொடர்புகளுமே முக்கிய காரணமாக உள்ளதாக இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் பொலிஸ் நிலையத்திலே நீண்டகாலமாக இடம் மாற்றம் வழங்கப்படாது பொலிஸார் பணியில் இருப்பதன் காரணமாக மரக்கடத்தல், மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

பொது மக்களினால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டால் அத்தகவல் பொலிஸ் நிலையம் ஊடாகவே குற்றம் புரிபவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இதன் காரணமாகவே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முழங்காவில் பகுதியில் நடைபெற்ற பல களவுகள் இதுவரை பிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முழங்காவிலில் இருந்து மரங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற நிலைமை இருந்த போதிலும் மரங்கள் வெட்டப்பட்டு சங்குப்பிட்டி வழியாக யாழ்ப்பாணத்துக்கும் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக பணியில் உள்ள பொலிஸாரை நீக்கி குற்றச்செயல்களைத் தடுப்பதற்குரிய புதிய பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கிராமத்தின் பொது அமைப்புகளும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இறுதியாக நடைபெற்ற பூநகரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இக்குற்றச்சாட்டுகளை முழங்காவில் பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like