கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளிகள் லிப்ட் வசதியை பயன்படுத்த அனுமதிக்கவும்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உள்ள மின்தூக்கி (லிப்ட்) வதியை மாற்றுத்திறனாளிகள், கர்ப்பவதிகள் மற்றும் ஏனைய நோயாளிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாமையால், சிகிச்சைக்காக செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள், மகப்பேற்று விடுதி மற்றும் பல்வேறு சிகிச்சைப்பிரிவுகள் மேல்மாடியிலேயே இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிகிச்சைக்காக செல்வோர் விடுதிகள் தங்கியிருப்போர் மேல்மாடிக்கு  செல்வதற்கு படிகளுடாக செல்லவே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணித்தாய்மார் முதியோர் எனப்பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் மேல்மாடிக்கு செல்வதற்கு மின்தூக்கி வசதிகள் இருந்தபோதும் அதனை பயன்படுத்த அனுமதிக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன், மின்தூக்கி அடிக்கடி பழுதடைந்து வருகின்றமையால் நோயாளிகளையும் கர்ப்பிணிகளும் படிகளின் ஊடாகவே கொண்டுச் செல்லப்படுகின்றனர்.

யுத்தம் காரணமாக தங்களது உடல் அவயங்களை இழந்து, மாற்றுத்திறனாளிகளாக காணப்படும் அதிகளவானோர், தமது மருத்துவத்தேவைக்கு பயன்படுத்தும் இவ்வைத்தியசாலையில் மின்தூக்கி வசதியை பயன்படுத்த  வைத்தியசாலை நிர்வாகத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

You might also like