புதுவருட கொண்டாட்ட தினங்களில் மக்களே அவதானமாக இருங்கள்!

தற்போதுள்ள வெயில் காலநிலை, எதிர்வரும் சில தினங்களில் மாற்றமடைந்து மழை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், சித்திரை புதுவருடம் மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகிய ஏப்ரல் 13 மற்றும் 14ம் திகதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை பெய்யும் வாய்ப்புகள் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணியின் பின், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் கடலோர பகுதிகளில் காலை நேரங்களில் சிறு மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதோடு, விசேடமாக மேல், வடமேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய மாகாணங்களில் அதிக (75 மில்லி மீற்றரிலும் அதிக) மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, காற்று தற்காலிகமாக பலமாக வீசக்கூடும் என்பதோடு, இடி, மின்னலின் போதான பாதிப்பிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் வடக்கு நோக்கி மிக அண்மித்து நகர்வடைவதன் காரணமாக, இம்மாதம் (ஏப்ரல்) 05ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்.

அந்த வகையில் இன்றைய தினம் (12) தாண்டிக்குளம், பெரியகாடு, மடுகந்த, தல்கஹவெவ, பங்குருகஸ்வெவ, கும்புருபிட்டி ஆகிய பிரதேசங்களில், நண்பகல் கடந்து, பிற்பகல் 12.11 ற்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில், (மு.ப. 11.00 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி) வெளியில் செல்வதை தவிர்ப்பது உகந்தது என்பதோடு, சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் அவதானமாக இருப்பது சிறந்ததாகும்.

You might also like