கணவனை இழந்த குடும்ப பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் : கிளிநொச்சியில் சம்பவம்

தந்தையை இழந்த மாணவி ஒருவரின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் வீட்டின் பினபுற வாசல் வழியாக தப்பி சென்று அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டுத்திட்டம் மூலம் அமைக்கப்பட்ட வீடு ஒன்றிலேயே வசித்து வருகின்றார். அந்த வீட்டில் கதவுகள் பொருத்தப்பட்டிருந்த போதும், ஜன்னல்கள் முழுமையாக பொருத்தப்பட்டிருக்க வில்லை.

ஜன்னல் கிறில்கள் வெறுமனே கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஆசிரியர் ஜன்னல் கிறிலை கழற்றிவிட்டு அதன் வழியே வீட்டுக்குள் சென்றுள்ளார் என குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

அத்துடன், அன்றைய தினமே அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணின் வீட்டுக்குள்ளும் உள்நுழையும் நோக்கில் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, மேற்படி இரண்டு பெண்களும் கடந்த ஐந்தாம் திகதி எழுத்து மூலம் பாடசாலை அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

தனக்கு அவ்வாறு எழுத்து மூலமான முறைப்பாடு கிடைத்திருக்கிறது எனவும், தான் உரிய நடவடிக்கைகளுக்காக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பதில் வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் வரும் வாரத்திற்கு பின்னர் விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்து, அதன் அறிக்கையை உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

You might also like