வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்

வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 5 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09.01.2021) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கடந்த (05.01.2021) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று(08.01.2021) மதியம் வெளியானதில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09.01.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது மாணவர்களின் நலகை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் , சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் , இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் , இலங்கை தமிழ் கலவன் பாடசாலை , காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11.01) வழமை போன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

You might also like