யாழில் குடும்பஸ்தரின் உயிரைக் காவு கொண்ட காய்ச்சல்

தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை தேவராசா(58) என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சாதாரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டில் இருந்தவாறே பனடோல் பருகிக் கொண்டிருந்தவருக்கு, காய்ச்சல் குறையவில்லை என்பதை உணர்ந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் காய்ச்சல் குறையாத நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருக்கு அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அண்மைக்காலமாக நாட்டில் டெங்கு நோயினால் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை உட்பட்ட பல மாவட்டங்களில் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது திடீர் திடீரென ஏற்படும் காய்ச்சல் குறித்த மக்கள் விழிப்போடு இருக்குமாறும். ஆரம்பத்திலேயே காய்ச்சல் அறிகுறிகள் தென்படின், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like