வவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட சூசைப்பிள்ளையார் குள வீதி மாத்திரம் நாளையதினம் (23.01) விடுவிக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் வவுனியாவில் பல இடங்கள் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் பிரகாரம் 250 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நகரின் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சூசைப்பிள்ளையார் குள வீதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள்,ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அப்பகுதி நாளையதினம் (23.01) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதுடன் குறித்த பகுதியில் திறக்கப்படும் அனைத்து வர்த்தக நிலையங்களும் தொற்று நீக்கிய பின்னர் திறக்கப்பட வேண்டுமென என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி போன்ற இடங்கள் தொடரந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிராந்திய சுகாதார பணிமனையினால் வழங்கப்படும் பரிசோதனை அட்டையை வைத்திருக்கும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படுவதுடன் மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like