வவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை திறப்பு

வவுனியா நகரில்

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் வவுனியா நகரின் பல இடங்கள் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியா நகரின் பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி போன்ற இடங்கள் தனிமைப்படுத்தலிருந்து நாளையதினம் (25.01.2021) விடுவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வவுனியா நகரில் முடக்கப்பட்ட குறித்த பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை (பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜன்) செய்து பரிசோதனை அட்டை வைத்திருக்கும் வர்த்தக நிலையங்கள் மாத்திரமே சுகாதார விதிமுறைகளுடன் திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

அத்துடன் இதுவரை முடக்கப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நாளையதினம் (25.01.2021) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் வவுனியா வர்த்தக சங்கத்தின் காரியாலயத்திற்கு சென்று பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் படிவத்தினை பெற்று பெயர் விபரங்களை பதிவு செய்து செவ்வாய்க்கிழமை (26.01.2021) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர் அல்லது அன்டிஜன்பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்

முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் குறித்த பகுதி வர்த்தக நிலையங்களில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் புதிதாக பணிபுரிய வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதினை உறுதிப்படுத்தும் அட்டை அல்லது ஆவணம் வைத்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறித்த செயற்பாடுகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்

இதேவேளை கடந்த மூன்று வார காலப்பகுதிக்குள் வவுனியாவில் 287 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like