பாலியல் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட இலங்கைப் படையினர்!

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படையினர், மீது 2000 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்டியில் மாத்திரம், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த படையினர், 300ற்கும் அதிகமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதில், 2004ம் ஆண்டுக்கும், 2007ம் ஆண்டுக்கும் இடையில், 134 இலங்கைப் படையினர் ஒன்பது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் அடங்கும்.

ஹெய்டியில் ஐ.நாவினால் அமைதி காப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட 900 பேர் கொண்ட இலங்கை இராணுவ பற்றாலியனைச் சேர்ந்தவர்களில் 134 பேர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கும் ஹெய்டி சிறுவர்களுக்கும் இடையில் சந்தேகத்துக்குரிய தொடர்புகள் இருப்பதாக, 2007ம் ஆண்டு ஐ.நாவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட ஒன்பது சிறுவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதன்போது 16 வயதுச் சிறுமி ஒருவர் தாம், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருடன், பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறினார்.

14 வயதான இன்னொரு சிறுமி, பணம் அல்லது உணவுக்காக தாம் ஒவ்வொரு நாளும் இலங்கை இராணுவத்தினருடன் உறவு கொண்டதாக தெரிவித்தார்.

இன்னொரு சிறுவன், 20க்கும் அதிகமான இலங்கைப் படையினருடன் பாலியல் உறவை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய 114 இலங்கைப் படையினர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

அதேவேளை இலங்கை தொடர்ந்தும் ஹெய்டிக்கு தமது படையினரை அனுப்பிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– Puthinappalakai

You might also like