தமிழ் புத்தாண்டு ராசிபலன்: ரிஷபம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

கார்த்திகை 2,3,4 , ரோகிணி, மிருக சீரிஷம் 1,2
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!பிரிந்த குடும்பம் சேருது! தொழிலில் லாபம் கூடுது!

குரு 5-ம் இடமான கன்னி ராசியில் வக்கிரமாக இருக்கிறார். அவர் செப்.1ல் 6-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13-ல் 7ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

ராகு 4-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் 3-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 10-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது ஜீலை 26-ல் 9-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். சனிபகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனை காணலாம்.

ஏப்ரம் 14-ஜீலை 31

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குருவால் தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.

பணியில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் அலைச்சல், வெளியூர் பயணம் ஏற்படலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்களுக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரம் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர்.

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதிகாரிகளிடம் அனிசரித்து போகவும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரிகள் பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெற வாய்ப்புண்டு. தொண்டர் வகையில் பணம் செலவாகும். மாணவர்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவர்.

ஆசிரியர் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர். நிலப்பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். ஆடை, ஆபரணம் சேரும். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.

2018 பிப்ரவரி-1-ஏப்ரல் 13

சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிக்கு எட்டில் சனி இருப்பதால் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் அதற்குரிய நற்பலன் கிடைக்கும். கலைஞர்கள் பாராட்டு, விருது கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர்.

மாணவர்கள் சீரான வளர்ச்சி பெறுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகச்சுற்றுலா சென்று வருவர். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர், ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. செல்ல வேண்டிய கோவில் திருச்சி உச்சிப்பிள்ளையார்.

You might also like