மே மாதம் இறுதி மற்றும் ஜூன் மாதத்தில் கோவிட் வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் ஆபத்து

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பயணங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என்றால், மே மாதம் இறுதி மற்றும் ஜூன் மாதத்தில் கோவிட் வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் கடும் ஆபத்தான நிலைமை உருவாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.
அப்படி நடந்தால் நாடு பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சிலாபத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நத்தார் பண்டிகையின் பின்னர் நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்ததை காண முடிந்தது.இதனால் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்கள் சுய கட்டுப்பாடு இன்றி செயற்பட்டால் மே மாத இறுதியில் கோவிட் பரவல் அதிகரிப்பதை காண முடியும்.
இதன் காரணமாக ஓரளவுக்கான பயண கட்டுப்பாடு மற்றும் உரிய வழிக்காட்டல்களை வழங்க சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.