வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 485 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதில், யாழ். மாவட்டத்தில் நான்கு பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும்,சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மற்றையவர் கோவிட் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டிருந்தவராவார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பணியாளருடன் தொடர்புடைய, தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like