தேய்வடைந்த டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு 3,500 ரூபா அபராதம் : வெளியாகிய புதிய அறிவிப்பு

தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது, தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு 3,500 ரூபாய் அபராதமும் அத்தகைய வாகனங்களை செலுத்தி காயத்தை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25,000 ரூபா அபராதமும் அறிவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த விபத்துகளுக்கு வாகன சாரதிகளின் கவனக்குறைபாடு , மதுபோதை மற்றும் வாகனங்களின் குறைபாடுகளும் பிரதான காரணமாக உள்ளன. இதனால் அவற்றை தடுக்கும் வகையில் விசேட சோதகைளை மேற்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இன்று (22) திங்கட்கிழமை முதல் நாளை மறுதினம் புதன்கிழமை வரை இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்போது தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்று எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வாகன சில்லுகள் தரமானதாக காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , 2009 ஆம் ஆண்டு கொண்டு வரவரப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 145 ஆவது சரத்துக்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு வாகனமும் தரமான சில்லுகளை பயன்படுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இவ்வாறு தரமற்ற சில்லுகளை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காகவே இந்த சுற்றிவளைப்பு அடம்பெறவுள்ளது. இதன்போது தேய்ந்த சில்லுகளை பயன்படுத்திய வாகனங்களை அடையாளம் கண்டால் , அவற்றுக்கு எதிராக 3, 500 ரூபா அபராதம் அறவிடப்படுவதுடன் , அத்தகைய சில்லுகளை கொண்ட வாகனங்ககளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி காயமடையச் செய்தால் வழமையான சட்டவிதிகளுடன், 25 ஆயிரம் ரூபா பணத்தொகை அபராதமாக அறவிடப்படும்.

You might also like