போக்குவரத்து சாரதிகளுக்கு வந்த அதிரடி சட்டம் : இராணுவ பயிற்சியும் வழங்கப்படுமாம்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் பயணிகள் போக்குவரத்து துறையில் ஈடுபடுவோருக்கான புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் கட்டாயமாக்கப்படும் என்று வாகன ஒழுங்குமுறை மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நாட்டில் வீதிவிபத்துக்களைக் குறைக்க புதிய விதிமுறைகள் தேவை என்றார்.

தற்போது ஒரு கனரக வாகனத்திற்கான உரிமத்தைப் பெறுவது கடினம் அல்ல. இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்ற ஒருவர், 60 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய ஒரு வாகனத்தை செலுத்தக்கூடியதாக உள்ளது. இதுஒரு குறைபாடுள்ள அமைப்பு என்றார்.

எனவே புதிய பயணிகள் போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.தற்போது இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளுக்காக இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

இ.போ.ச சாரதிகள் பணியமர்த்தப்படும்போது பயணிகள் போக்குவரத்து தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு உள்ளக பயிற்சி அளிக்கப்படுகிறது. . இது தனியார் துறையிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பயணிகள் போக்குவரத்து உரிமத்தைப் பெறுவதற்கு, ஒரு நபர் இ.போ.ச அல்லது பாதுகாப்புப் படை பயிற்சி பாடசாலையில் இரண்டு வார காலத்திற்கு பயிற்சி பெற்று, பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

முதல் கட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்குள் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளின் சாரதிகளுக்கு இது கட்டாயமாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா, அலுவலகம் மற்றும் பாடசாலை பேருந்துகள் உட்பட 10 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு இது இரண்டாம் கட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

You might also like