பதிவு செய்யப்படாத கைப்பேசி விற்பனை நிலையங்கள் சுற்றி வளைப்பு – வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபா பணம்

பதிவு செய்யப்படாத கைப்பேசி விற்பனை நிலையங்கள் சுற்றி வளைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தில் பதிவு செய்து கொள்ளாத கைப்பேசி விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாடிக்கையாளர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த கைப்பேசி விற்பனை நிலையமொன்று குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைப்பேசி விற்பனை நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அதிக விலையுடைய கைப்பேசிகளை மிகவும் குறைந்த விலைக்கு வழங்குவதாக பிரச்சாரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பெருந்தொகை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்தி 20 நாட்களின் பின்னரே கைப்பேசி வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தினங்களில் கைப்பேசிகள் வழங்கப்படாத காரணத்தினால் வாடிக்கையாளர்கள் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த கைப்பேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களது வங்கிக் கணக்குகளில் சுமார் 30 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like