விபத்தில் பறிபோன உயிர் : தேர்த்திருவிழாவும் இடை நிறுத்தம்

நானுஓயா, டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பின் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பரையும் ஏற்றிக்கொண்டு மேற்படி நபர் சென்றுள்ளார்.

இதில் குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி தோட்டத்தில் லயக்குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் குறித்த இளைஞர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றொருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்

இந்த விபத்து சம்பவத்தினால் குறித்த தோட்டத்தில் இடம்பெறவிருந்த ஆலய தேர்த்திருவிழாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like