கிளிநொச்சியில் போதிய வசதிகள் இன்மையால் குடிபெயரும் மக்கள்

கிளிநொச்சி, கல்லாறு கிராமத்தில் பல இலட்சம் ரூபா செலவில் வீடுகளை கட்டிய மக்கள் அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் இன்மையால் அங்கிருந்து குடிபெயர்ந்து வருகின்றனர்.

கிளிநொச்சி, கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் குறித்த கிராமத்தில் உள்ள குடும்பங்கள் பல வசதி வாய்ப்புக்கள் தேடி வேறு இடங்களுக்கு சென்று குடியேறி வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படாமை, போதிய தொழில்வாய்ப்பின்மை, உரியகல்வி வசதியின்மை போக்குவரத்து வசதியின்மை போன்ற தமக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக இந்த பகுதியிலிருந்து 93 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டவர்கள் காணிகள் அற்ற குடும்பங்கள் என சுமார் 263 வரையான குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வீடுகள் மலசலகூடங்கள் என்பன பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு அவற்றில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

இருப்பினும் தற்போது மேற்படி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களில் வசதிகளைத் தேடி இடம்பெயர்ந்துள்ள நிலையில் குறித்த வீடுகள் பாவனையின்றி பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆட்கள் குடியிருக்காத வீடுகளில் கசிப்பு விற்பனைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தாங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் இந்த கிராமத்தில் எஞ்சியுள்ள குடும்பங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like