இலங்கை செல்பவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசு! புதிய திட்டம் அறிமுகம்?

இலங்கைக்கு சுற்றுலா செல்லுபவர்களுக்கு தேயிலை பொதிகளை பரிசாக வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்திவருகிறது.

நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த தேயிலைப் பொதிகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது.

இத் திட்டம் குறித்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

அவரின் பரிந்துரையின் படி, நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் தேயிலையினை பரிசாக அளித்து அவர்களுக்கு மகிழ்வினை ஏற்படுத்தலாம்.

இதன் மூலமாக இலங்கையின் தரமான தேயிலையினை வெளிநாட்டவர்களுக்கு அறிமுகம் செய்வதுடன், இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதியை பெருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு, சுற்றுலாத்துறை அமைச்சுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆலோசனை நடத்துமாறு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்பும் போது, தேயிலைப் பொதிகளை வழங்கலாம் என்று சில அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஏனெனில், தேயிலைப் பொதிகளை சுற்றுலாப் பயணிகள் தமது பயணம் முழுவதும் காவிக் கொண்டு செல்ல வேண்டியேற்படும். எனவே அவர்கள் சுற்றுலாவினை முடித்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களின் சொந்த நாடு திரும்பும் பொழுது அவர்களுக்கு அங்கு வைத்து பரிசாக அளிக்கலாம் என்று அமைச்சர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இது குறித்து விரைவில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என நம்பப்படுகிறது.

You might also like