அக்கராயன் அணைக்கட்டு வீதியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்பனை: மக்கள் முறைப்பாடு

சட்ட விரோதமான முறையில் அரசாங்க சீல் வைக்கப்பட்ட சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களால் தமது பகுதிகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி அக்கராயன் அணைக்கட்டு வீதி வைத்தயசாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி அக்கராயன் அணைக்கட்டு வீதி வைத்தியசாலை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் கசிப்பு விற்பனை மற்றும் அனுமதிப்பத்திரமின்றிய அரச சீல் சாராய விற்பனை என்பன அதிகரித்துகக் காணப்படுகின்றன.

இதன் விளைவால், இந்த வீதியை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும், அதிகளவான இளைஞர்கள் குடிப் பழக்கத்திற்கு உள்ளாகி, இந்த இடங்களில் அதிக நேரம் தங்கியிருந்து வீதியால் பயணிப்போர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களாக மாறுகின்றனர்.

இதேவேளை, இப்பகுதியில் பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டு பலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகின்றபோதும் ஒருசிலர் இதனை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் குடும்பத்தைச் சேந்த ஒருவர் இப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயம் விற்பனை செய்து வந்தநிலையில் மூன்று தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினூடாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னரும் இந்த சட்டவிரோத சாராய விற்பனை குறைந்ததாக தெரியவில்லை என முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய பொறுப்புக்களில் உள்ள சிலரை இவ்வாறான சட்டவிரோத மதுபான விற்பனைகளில் ஈடுபட்டு வருவதுடன் இப்பகுதியில் உள்ள இளம் சமூகத்தினரையும் சீர் குலைத்து வருகின்றனர் என்றும் இதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like