கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆபத்து! 61 பேரின் உயிரைக்காவு கொண்ட நோய்

டெங்கு போன்று ஒரு வகையான காய்ச்சலினால் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்துள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, டெங்கு போன்ற ஒருவகையான காய்ச்சல் அண்மைய நாட்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் பரவிவருகிறது.

இதனால் கொழும்பு மருத்துவமனையில் அதிகளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சைகளை அளிப்பதற்காக தனியான விடுதி ஒன்றை ஒழுங்கு செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், சுமார் 30 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், 2017ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும், சுற்றுப் புறச்சூழல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சூழலியலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேவையற்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதன் மூலமாக தொற்று நோய்களை தவிர்க்கலாம் என்றும், இதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like