யுத்தத்தின் பின்னரும் கேள்விக்குறியாகியுள்ள முல்லைத்தீவு மக்களின் வாழ்க்கை

போரினாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பெரும் இழப்புக்களையும், அழிவுகளையும் எதிர் கொண்ட மக்கள் சமூகம் தற்போது தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி எட்டு வருடங்களை கடந்த நிலையிலும் பல்வேறு வகையிலான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழும் அவல நிலை இன்றும் காணப்படுகின்றது.

அதாவது வறுமையான நிலையில் காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று புதுக்குடியிருப்பு வெலிஓயா ஒட்டுசுட்டான் துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் இதில் வறுமை நிலையில் வாழும் அதிக மக்களைக் கொண்ட பகுதியாகவும் மாந்தை கிழக்கு பிரதேசம் காணப்படுகின்றது.

அதாவது வவுனியா மாவட்டத்தின் ஒருபகுதி எல்லையோரக் கிராமங்களையும் மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதி எல்லையோரக் கிராமங்களையும் கரையோரப்பகுதிகளாக கொண்டும் 15 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி அமைந்துள்ள மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவில் தற்போது இரண்டாயிரத்து 932 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட சுமார் 9,196 பேர் வரையில் வாழும் ஒரு பகுதியாகும்.

இதில் ஒரு சில கிராமங்கள் தவிர ஏனைய கிராமங்கள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் பின்தங்கிய கிராமங்களாகவே காணப்படுகின்றன.

குறிப்பாக சிறாட்டிகுளம் பொன்னகர் விநாயகபுரம் மூன்றுமுறிப்பு கொம்புவைத்தகுளம் பாலைப்பாணி பனங்காமம் எருவில் போன்ற கிராமங்களில் சாதாரணமாக பயணிக்கக்கூடிய வீதிகள் கூட இல்லாத நிலை மின்சார வசதிகள் இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இவ்வாறான பின்தங்கிய பகுதிகளில் வாழும் குடும்பங்களில் சுமார் 90 வீதமான குடும்பங்கள் அன்றாட உணவிற்கே போராட வேண்டிய மிகவும் வறிய மக்களாகவே உள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களது வாழ்வியல் குறித்தும் எவரும் அக்கறை செலுத்துவதாக இல்லை. இதனால் இந்த மக்களின் நிலை மேலும் கீழ் நோக்கிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கல்வியை வழங்கும் வகையில் உள்ள பாடசாலைகளில் பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய உயர் தரப்பாடசாலைகள் இன்றும் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறைகளைக் கொண்டே இயங்கி வருகின்றன.

இதனைவிட ஏனைய பாடசாலைகள் பல, அதிபர் உட்பட ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களுடன் மாத்திரம் இயங்கிவருகின்றன.

சில பாடசாலைகளுக்கு தினமும் ஆசிரியர்கள் செல்வதற்கு பகல் 9 அல்லது 10 மணியாகி கூட ஆகிவிடும். இவ்வாறு இந்த பின்தங்கிய கிராம மக்களுக்கு கல்வி வாய்ப்பு உரிய வகையில் கிடைப்பதில்லை.

இதனால் அதிகளவான பெற்றோர் தமது பிள்ளைகளுக்குரிய கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பகுதியில் மருத்துவ வசதி என்பது மிகக்கடினமான ஒன்று.

இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வீதியில் குழந்தையை பிரசவித்து விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லமுடியாது. உயிரிழந்த பல்வேறு சம்பவங்கள் இந்த மக்களின் கஷ்டங்களுக்கு சான்றாக உள்ளன.

விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரமாகக கொண்டு இந்த பகுதிகளில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு நிலவிய கடுமையான வறட்சியினால் விவசாயத்தில் பாரிய நட்டத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இதனைவிட கால்நடைகளை கண்ணும் கருத்துமாக அவதானிக்க வேண்டிய சூழல் தவறுமாக இருந்தால் அதனை திருடிச்செல்வதற்கு அதிகம் பேர், இப்படியே இவர்களின் துன்பங்கள் நீண்டு செல்கின்றது.

கடந்தகால யுத்தத்தினால் இந்த பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இழப்புக்களை எதிர்கொண்டும் மெனிக்பாம் வரை சென்று நிர்க்கதியான நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கும் வகையில் முதன்முதலாக மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு மீள்குடியேறினர்.

இன்று எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாதாரணமாக ஒருபனடோல் தீப்பெட்டி வாங்குவதற்கு கூட 14-20 கிலோமீற்றர் செல்லவேண்டிய நிலையில் உள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதிகளில் பின் தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு பாடசாலைக்கு கல்விக்கு மேலாக கல்வி வளர்ச்சி நிலையங்கள் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தியாகதீபம் தீலிபன் மருத்துவமனைகள் என பல கட்டமைப்புக்கள் இயங்கின.

இதனால் பல தரமான மருத்துவ உதவிளைப் பெற்றுக்கொண்டதுடன் அப்போது கல்வி கற்ற பெருமளவானவர்கள் இன்று ஆசிரியர்களாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக அரச நிர்வாகங்களையும் தனியார் துறைகளையும் அலங்கரிப்பவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறு வளமிக்க பகுதிகளாகக் காணப்பட்ட மேற்படி பிரதேசம் இன்று அதற்கான வசதிவாய்ப்புக்கள் வழங்கப்படாமை உரிய போக்குவரத்து வசதிகள் இன்மை வீதிகள் புனரமைக்கப்படாமை என பல்வேறு புறக்கணிப்புக்களால் மிக மோசமாக பாதிப்படைந்து செல்கின்றது.

மாறாக தற்போது குறித்த பகுதிகளில் கடமையாற்றும் உயரதிகாரிகள் சட்டத்தை நிலை நிறுத்துபவர்கள் யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் பாதுகாக்கப்பட்ட பெறுமதியான வளங்களை இந்தமக்களைப் பயன்படுத்தி அழித்தும் அபகரித்தும் செல்கின்றனர்.

தற்போது மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு உழைக்கின்ற ஒரு சிலர் தவிர இந்தப்பகுதியில் உள்ள வளங்களை அபகரித்து இலாபம் தேடும் வகையிலேயே அரசியல்வாதிகள் அவர்களின் ஆதரவாளர்கள் அதிகாரிகள் பலர் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

இவ்வாறு பின்தங்கிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இங்குள்ள வளங்களைப் பாதுகாக்கவும், துறைசார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.

You might also like