உரிமைகளை வலியுறுத்த ஒன்றிணைவோம்! கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே நாள்

மறுக்கப்பட்ட உரிமைகளை வலியுறுத்தி உரக்கக் குரல் கொடுக்க ஒன்றிணைவோம் என்பதை வெளிப்படுத்தும் தமிழ்த் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வேண்டியும் தொழிலாளர் உரிமையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மே நாள் இம்முறை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகும் தமிழ் தேசிய மே-நாள் ஊர்வலம் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி டிப்போச் சந்தியைச் சென்றடைந்து ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மே-நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் உரிமையை வலியுறுத்தியும், விசாரணைகள் எதுவுமின்றி வெறும் சந்தேக நபர்கள் எனக் கூறி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தியும், தொழிலாளர்களது விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள்,

தொழில் மையங்களை அபகரித்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கோரியும், பூநகரிப் பிரதேசங்களிலுள்ள கடல் தொழில் வளங்களை அபகரித்துள்ள கடற்படையினரை வெளியேற்றி சுதந்திரமாகத் தொழில் செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் என இன்னும் பல உரிமை மறுப்புக்களுக்கெதிராகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உரிமைகளை வலியுறுத்த ஒன்றிணையும் தமிழ்த் தேசிய மே நாளில் தொழிலாளர்கள், பொது அமைப்புக்கள், மக்கள், மக்களின் உரிமைக்காகப் போராடும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு உரிமைகளை வென்றெடுக்கப் பலம் சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய மே நாள் ஒழுங்கமைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள உரிமைகளை வலியுறுத்தும் தமிழ் தேசிய மே நாள் நிகழ்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்கள், மக்கள் எனப் பெருமளவானவர்கள் உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like