கணவர் வெளிநாட்டில்.. மனைவி 4 மாத சிசுவுடன் திடீர் மரணம்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த பெண்ணின் வயிற்றில் 4 மாத பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 18 மாதங்களாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையிலேயே இந்த பெண் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வந்தாறுமூலை கிராமத்தில் திடீரென மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயது பெண்ணொருவரின் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றுப் பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் 4 மாதங்களேயான பெண் சிசு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், பெண்ணுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்திலும் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் காணப்பட்டதால் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெறவும் இறந்த பெண்ணின் உடல் மாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மரணமடைந்த பெண்ணின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like