கிளிநொச்சியில் மாமரம் ஒன்று மட்டுமே வளர்ந்துள்ளது குடியிருந்த வீட்டை காணவில்லை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில், கிளிநொச்சியில் தாங்கள் குடியிருந்த பிரமாண்ட வீட்டின் அஸ்திவாரத்தின் மீதேறி நின்று கொண்டு சிதைந்துப்போன தமது குடியிருப்பு தொடர்பில் தாயகம் திரும்பிய தம்பதியினரான கந்தசாமி மற்றும் சிவமலர் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ள அவர்கள்,

“கிளிநொச்சியில் பெரும்பாலான குடியிருப்புகள் போரினால் முற்றாக சிதைந்து போயுள்ளன. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது மிகவும் சின்னதாக இருந்த மாமரம் ஒன்று தற்போது மிகவும் பெரியதாக வளர்ந்துள்ளது” என்கிறார் சிவமலர்.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் கந்தசாமி தம்பதியர். போதிய மருத்துவ சிகிச்சை இன்மையால் தற்போது தாயகம் திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு பின்னர் இதுவரை சுமார் 8,000 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இலங்கையின் தற்போதைய சூழல் வருத்தம் அளிப்பதாகவே இருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் போரினால் நாடு பிளவுப்பட்டதை அவர்கள் நேரில் பார்த்தவர்கள். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி, 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னரும் போரினால் ஏற்பட்ட காயங்களை எப்படி குணப்படுத்த போகின்றோம் என்னும் பதற்ற நிலையிலேயே இலங்கை இன்னமும் உள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன அரசும் இதுவரை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்பு காட்டவில்லை.

அத்துடன், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நடவடிக்கைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இதுவரை 50,000 குடியிருப்புகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இன்னும் 137,000 குடும்பங்கள் வீடின்றி போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like