இலங்கைக்குள் பிரவேசித்துள்ள விடுதலைப் புலி புலனாய்வாளர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட புலனாய்வாளர்களை தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரமளவில் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சேர்ந்த சிரேஷ்ட புலனாய்வாளர்கள் சிலர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியிலேயே நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் நடமாடுவதாக தெரிந்தால் அல்லது புதிய நபர்கள் தென்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினருக்கு பலத்த எதிர்ப்பை காட்டிய படையணிகளில் ஜெயந்தன் தலைமையிலான படையணி முக்கியமானதாகும் என அந்த ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

You might also like