ஒரு பக்கம் பிணங்களைத் தேடும் நாய் : மறுபக்கம் புத்தகங்களைத் தேடும் தாய்!

கொலன்னாவ – மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நேற்றை தினம் 28ஆக இருந்தோரின் எண்ணிக்கை இன்று 31ஆக அதிகரித்துள்ளது.

குப்பை மலை சரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியிருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

எனினும் 30 பேர் வரையில் மாத்திரமே இதில் புதைந்திருப்பார்கள் என அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில், மீட்புப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது.

இதில் 246 குடும்பங்களைச் சேர்ந்த 1059 பேர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக இன்று பொலிஸ் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், இதில் பாதிப்படைந்த வாகனங்களும் வீட்டு உபகரணங்களையும் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதில் ஒரு தாய் தனது பிள்ளைகளின் புத்தகங்களை தேடி சேகரித்துக்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பக்கம் பிணங்களைத் தேடும் மோப்ப நாய்கள், மறு பக்கம் பிள்ளைகளின் புத்தகங்களைத் தேடும் தாய் என பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like