வறட்சியால் வடக்கில் நாலரை இலட்சம் பேர் பாதிப்பு
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக 6 இலட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சி காரணமாக வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலைகளும் வற்றிப் போயுள்ளன. இதனால் பல மைல்தூரம் நடத்து சென்றே நீரைப் பெற வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல தாவரங்கள் நீரின்றி கருகி மடியும் நிலை உருவாகியுள்ளதால், விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணத்தில் மாலை நேரங்களில் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும் அது வறட்சியை சமாளிக்கும் வகையில் அமையவில்லை.
எதிர்வரும் 23, 24ஆம் திகதிளயவிலேயே மழை பெய்யக்கூடும் என்றும், அதுவும் தென்மேற்குப் பிராந்தியத்திலேயே பெய்யும் என்றும் வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் வறட்சி காரணமாக, கிழக்கு மாகாணத்தில் 95 ஆயிரத்து 334 பேரும், மேல் மாகாணத்தில் ஆயிரத்து 128 பேரும்,
தென் மாகாணத்தில் 3 ஆயிரத்து 77 பேரும், வடமத்திய மாகாணத்தில் ஒரு இலட்சத்து 990 பேரும், வடக்கு மாகாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 603 பேரும்,
சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 369 பேரும், வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.