சர்ச்சைக்குரிய தனது கட்டுரையை மீளப்பெறுவதாக தமிழ்க்கவி அறிவிப்பு
கிளிநொச்சி கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 என்ற நூலில் தான் எழுதிய கிளிநொச்சியும் மலையகத் தமிழரும் என்ற கட்டுரையை மீளப்பெறுவதாகவும், அந்த கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் அந்த கட்டுரையின் ஆசிரியர் தமிழ்க் கவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தனது கட்டுரை தொடர்பாக அவர் கிளிநொச்சி கரைச்சி கலாசார பேரவைக்கு நேற்று(18) எழுதிய கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
07-04-2017 கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் நூலில் மலையகத் தமிழரும் கிளிநொச்சியும் எனும் என்னுடைய கட்டுரை வெளியாகியிருந்தது.
அந்த கட்டுரையில் சில விடயங்கள் மலையக சமூகத்தை இழிவுப்படுத்துவதாக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மக்கள் மத்தியில் ஒரு வித கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டதையிட்டு,
மேற்படி கட்டுரையில் ஒரு சில விடயங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டதையிட்டு, மக்களின் மனநிலைகளை கருத்தில் கொண்டு அவர்களது மனநிலைகள் பாதிப்புறா வண்ணம் அவர்களுக்கும் எனக்குமான நல்ல நட்புறவு தொடர்வதற்காகவும் நான் கட்டுரை தொடர்பாக எனது மனவருத்தத்தினை தெரிவித்துக்கொள்வதுடன்,குறித்த கட்டுரையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனத்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.