திருமணம் என்ற பெயரில் இலங்கைப் பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த நபர்!
இலங்கைப் பெண்கள் பலரை ஏமாற்றி மாலைதீவுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த நபருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலங்கைப் பெண்கள் பலரை திருமணம் செய்வதாக பொய் கூறி அவர்களை மாலைதீவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.
காலி மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல பெண்களை குறித்த நபரால் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் பாலியல் தொழில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து இலங்கைக்கு தப்பி வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர், கடந்த டிசம்பர் மாதம், இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இன்று கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே வெளிநாடு செல்வதற்கான தடையை நீதவான் பிறப்பித்துள்ளார்.