கள்ளக்காதலிக்காக விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல்: பரபரப்பு சம்பவம்

கள்ளக்காதலியுடன் ஊர்சுற்றுவதற்கு பணம் இல்லாததால் விமானத்தை கடத்தப்போவதாக பொலிசாருக்கு தகவல் அனுப்பிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த 16-ஆம் திகதி 6 பேர் கொண்ட கும்பல் விமானத்தை கடத்தப் போவதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

இதனால் விமானநிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் இவ்வாறு கூறிய தகவல் பொய் என்பதும் பொலிசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பொலிசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வம்சி என்பவர் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வம்சி, இவருக்கு திருமணாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் வம்சிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அது காதலாக மாறியுள்ளது. வம்சியின் காதலி உல்லாச சுற்றுலா செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு வம்சியிடம் பணமில்லை, இருந்த போதிலும் அவரை சமாளிக்க வேண்டும் என்பதற்காக போலியான விமான டிக்கெட்டை தயார் செய்து காதலிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதோடு அவரின் காதலி சென்னை, மும்பை பயணம் செய்ய இருந்த 16-ஆம் திகதி மும்பை விமான நிலையத்துக்கு விமானம் கடத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கள்ளக்காதலிக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்ட வம்சியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like