ஓமந்தையில் தாயும் மகனும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தாமதம்!

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் மரணமான தாய் மற்றும் மகனின் சடலம் பிரேத பரிசேதனையின் பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளத்தில் நேற்றைய தினம் (2.1) வீட்டுக்கிணற்றில் இருந்து 30 வயதான சதீஸ்வரன் சுதாசினி மற்றும் அவரது மகனான 7 வயதுடைய சதீஸ்வரன் டினோஸன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் அப்பகுதி மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்ட வரப்பட்டிருந்தது.

அங்கு சென்றிருந்த வவுனியா மாவட்ட உத்தியோகப்பற்றற்ற நீதிபதி அன்ரன் புனிதநாயகம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்திரவிட்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து கற்சிலை மடுவில் வாழ்ந்துவந்தாகவும், அண்மையில் மகனின் பிறந்த தினத்தையொட்டியே பன்றிக்கெய்தகுளத்திற்கு வந்து மகனின் பிறந்ததினத்தினை வெகு சிறப்பாக கொண்டாடியிருந்ததுடன் கணவருடன் சுமூகமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் மரணம் சம்பவிப்பதற்கு முன்தினம் இரவு வயிற்றுப்பகுதியில் வலியுள்ளதாக தெரிவித்த ச.சுதாயினி வைத்தியரை பார்க்கவேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார். கணவரும் சம்மதம் தெரிவித்திருந்ததுடன் கோவிலுக்கும் செல்லவேண்டும் என மனைவியிடம் தெரிவித்துவிட்டு தான் பணிசெய்யும் விநியோக வாகனத்தில் கிளிநொச்சி சென்று வருவதாக தெரிவித்து கிளிநொச்சி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

அத்துடன் வீட்டில் அவர்களுடன் வாழ்ந்து வந்த சதீஸ்வரனின் தாயார் கிராம சேவகரிடம் பதிவொன்றினை மேற்கொள்வதற்கான சென்றிருந்துடன் தந்தையார் அருகில் உள்ள தோட்டத்தில் பணிசெய்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சதீஸ்வரனின் தாயாரே இருவரையும் காணாது தேடிய நிலையில் இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்ததாகவும் எனவே இருவரும் எங்காவது பயணமொன்றினை மேற்கொள்வதற்கு தயாராகியிருந்த நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதா அல்லது கோவிலுக்கும் வைத்தியாரையும் பார்வையிடவும் செல்லவேண்டும் என கணவர் கூறிவிட்டு சென்றமையினால் அவர்கள் புதிய ஆடைகளுடன் அணிந்திருந்தனரா என்பது தொடர்பிலும் விசாரணைகளில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மரணம் சம்பவித்த விதம் தொடர்பான இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

You might also like