கிளிநொச்சியில் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி பாரிய கடையடைப்பு

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் (21.04.2017) 61ஆவது நாளை எட்டியுள்ளது.

தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் எதிர்வரும் 27ஆம் திகதி பாரிய கடையடைப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டம் முழுவதிலும் உள்ள வர்த்தகர்கள், பொது நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தாயொருவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியுள்ள போதிலும், எமது கோரிக்கைகளை யாருமே கவனத்திற் கொள்ளாத நிலையில் தெருவோரம் அநாதைகளாகக் கிடக்கின்றோம்.
எமது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எம்மை வெறும் காட்சிப் பொருளாக பார்த்து செல்கின்றனரே தவிர, எமது வேதனைகளையும், கண்ணீரையும் துடைத்து தீர்வை பெற்றுத் தருபவர்களாக இல்லை.

எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் போராடி வந்தோம். எனினும், இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில், புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்” என்றார்

You might also like