ஆர்ப்பாட்டகாரர்களின் முற்றுகைக்குள் வவுனியா மாவட்ட நெற்களஞ்சியசாலை!
வவுனியா மாவட்ட நெற்களஞ்சியசாலைகளில் இருந்து தென்பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிசிஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் களஞ்சியசாலையை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வவுனியா பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது.
வவுனியா, பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லினை தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பாரவூர்திகள் வந்திருந்தின. இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஆலைகளில் வேலை செய்வோர், பொது மக்கள் எனப்பலரும் எதிர்ப்பு தெரிவித்து களஞ்சியசாலையில் உள்ள நெல்லினை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அதனை குற்றி மாவட்டத்தில் உள்ள சதோச மற்றும் பலநோக்க்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் எமது பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, குறித்த எதிர்ப்பு நடவடிக்கை குறித்து வன்னி மாவட்ட நாடபளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் எஸ்.வி.ரோஹண புஸ்பகுமார உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு தொலைபேசி மூலம் கொண்டுவரப்பட்டதையடுத்து நெல்லினை ஏற்றுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அவர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.