கிளிநொச்சியில் தொடர்ந்தும் 61ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம்

நல்லாட்சி நடக்கின்றது என்றால் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது அல்லது அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை எங்களுக்கு வழங்க ஏன் இந்த அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து 61வது நாளாக இன்று(21) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 61 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆராஜக ஆட்சி ஒழிக்கப்பட்டு நல்லாட்சி மலர்ந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.

நாங்கள் எங்களது உறவுகளை இராணுவத்திடம் கையளித்து அவர்கள் சரணடைந்து இன்று எட்டு வருடங்களாகியுள்ளன.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் அவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களை காட்டுமாறும் கேட்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

இதற்காக போராடிய பலரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து எங்களை பயமுறுத்தினர். இருந்தும் நாங்கள் கைவிடவில்லை. தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது.

இங்கு நல்லாட்சி நடக்கின்றது என்றால் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது. அல்லது அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவலை எங்களுக்கு இந்த அரசு வழங்க வேண்டும். இதற்கு ஏன் இந்த அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது என கேள்வியெழுப்பியுள்ளனர்.

புதுவருடத்தில் கூட நாங்கள் இந்த வீதியில் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் போது எங்கள் பிள்ளைகளை காணாமல் ஆக்க காரணமாக இருந்தவர்கள் மிகவும் சிறப்பாக புதுவருடத்தைக் கொண்டாடினார்கள்.

எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அல்லது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற பதிலை இந்த அரசு வழங்கவேண்டும்.

மேலும், இல்லையேல் எதிர்வரும் தினங்களில் நாங்கள் எமது போராட்ட வடிவங்களை மாற்றி அரச நிர்வாகங்கள் முடக்கியும் ஏ-9 வீதியை மறித்தும் போராடவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like