இளைஞர்கள் இல்லாமல் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியும், நாட்டினுடைய வளர்ச்சியும் மென்மேலும் உயர்வடையாது

இளைஞர்கள் இல்லாமல் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியும், நாட்டினுடைய வளர்ச்சியும் மென்மேலும் உயர்வடையாது என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக்காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எந்த ஒரு விடயமாக இருந்தாலும் இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுக்கின்ற போது, அது மிக விஸ்வரூபமாக வெளிக்கொணர்ந்து வெற்றியும் அடைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே இருக்கும்.

கடந்த காலங்களிலே வவுனியாவிலே நடந்த போராட்டங்கள் மலிவுற்று காணப்பட்ட போதிலும் இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து திறம்பட நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்று பார்க்கின்ற நிலைமையில் இருந்தது.

அவ்வாறான போராட்டங்கள் மறுபடியும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது அநாதரவாக இருக்கின்றார்கள். அந்த போராட்டம் இங்கு மறுபடியும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதா? என்ற எண்ணத்தோடு அந்த போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மறுபடியும் இந்த இளைஞர்கள் எங்களுடைய உறவுகளுக்காக இந்த போராட்டத்தில் தங்களுடைய கைகளில், மனங்களிலே சுமக்கின்ற பொழுது அது மிகவும் வலுவுற்றதாக இருக்கும்.

இளைஞர்கள் இன்று அரசியலுக்கு வருவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. இளைஞர்களை எல்லோரும் கருத்தளவிலே அல்லது பேச்சு வழக்கிலே அரசியல் மேடைகளிலே சொல்லுவார்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டினுடைய முதுகெலும்பாக அவர்கள் இருக்க வேண்டும்.

நீங்கள் விழுந்து போகின்ற இந்த சமூகத்தை கட்டி காக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த பேச்சுக்கள் வெறுமனையே மேடையளவிலேயே இருக்குமேயொழிய இந்த இளைஞர்களுக்கு களத்தை உருவாக்கி கொடுக்க யாருமே இல்லை.

இளைஞர்கள் இல்லாமல் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியும், நாட்டினுடைய வளர்ச்சியும் மென்மேலும் உயர்வடையாது. இளைஞர்கள் நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.

உங்களுக்காக உறுதுணையாக மேடை பேச்சுக்காக அல்ல உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். உங்களை கைபிடித்து உங்களோடு பயணிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்றார்.

 

You might also like