கிளிநொச்சி குளத்தின் முழு நீரும் வெளியேறும் அபாயம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள குளத்தின் நீரை வெளியேற்றும் வாய்க்கால் ஆழமாக காணப்படுகின்றது, இந் நிலையில் குளம் உயரமாகவும், வாய்க்கால் ஆழமாகவும் காணப்படுவதால் குளத்திலுள்ள முழு நீரும் வெளியேறும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும் வெளியேறும் அபாயம் இருப்பதனால் குளத்தில் மணல் மற்றும் மண் படிமங்களை அகற்றி மூன்று அடியாக ஆழப்படுத்தக்கோரி இரணைமடு கமக்கார அமைப்புக்கள் சம்மேளனம் நீர்ப்பாசணத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் காலத்திற்கு நீரை பெறும் குளமாக காணப்படும் இக்குளம் இரணைமடு குளத்தின் நீரை உள்வாங்கி வெளியனுப்பும் குளமாகவும், கனகாம்பிகை குளத்தின் வான் நீரையும், ஏனைய பிரதேசத்து மழை நீரையும் உள்ளீர்த்து வெளியனுப்பும் குளமாகவும் காணப்படுகிறது.

எனினும் குளத்தின் துருசினை திறந்து விட்டால் முழு நீரும் வெளியேறிவிடும். காரணம் குளம் மண் நிரம்பி திட்டாக உள்ளது இதனால் நகர் மற்றும் புறநகர் பகுதி கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைகிறது எனவே குளத்தினை துருசு மட்டத்திலிருந்து மூன்று அடிக்கு ஆழப்படுத்தி தருமாறு கோருகின்றோம் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் மேலும் குறிப்பிடுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வினவியபோது குறித்த கோரிக்கை கிடைக்கப்பெற்றதாகவும், நீண்ட காலமாக குளம் சீர் செய்யப்படாமையினால் மணல் மற்றும் மண் படிந்து துருசு மட்டத்தை விட உயர்ந்து காணப்படுகிறது. எனவே குளத்தை ஆழப்படுத்த வேண்டிய பணி கட்டாயம் செய்யவேண்டியது. அதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டும் என நீர்ப்பாசணத் திணைக்களம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like