வரலாற்றில் முதற்தடவையாக வெற்றி பெற்றது கிளிநொச்சி மாவட்டம்

வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும், வடக்கு மாகாணத்தின் துடுப்பாட்டம் மற்றும் மகளிருக்கான கரப்பந்தாட்டங்களில் முதற்தடவையாக கிளிநொச்சி மாவட்டம் வெற்றி ஈட்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு போட்டிகள் இன்று(22) ஆரம்பமானது.

இந்த நிலையில் துடுப்பாட்டம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்திலும், கரப்பந்து, இளைஞர்சேவை மன்ற மைதானத்திலும் நடைபெற்றன.

துடுப்பாட்டத்தில் இறுதி ஆட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அணியும், யாழ்ப்பாண மாவட்ட அணியும் பலப்பரீட்சை செய்த நிலையில் 15 பந்துப் பறிமாற்றங்களைக் கொண்ட போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி நிர்ணயிக்கப்பட்ட பந்துப்பரிமாற்ற நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 103 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனக்களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட அணி 10.5 பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கெட்டுகளினால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று மாகாணத்தின் வெற்றியாளரானது.

இந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்த துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் றொஷான், மாவட்டவிளையாட்டு உத்தியோகத்தர் மோகனதாஸ் மாவட்டத்தின் ஏனைய பபயிற்றுவிப்பாளர்கள், மற்றும் பிரதேசவிளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றிகளை விளையாட்டு வீர வீராங்கனைகள் தெரிவித்து கொண்டனர்.

இளைஞர்சேவைமன்ற மைதானத்தில் இன்று நடைபெற்ற மகளிருக்கான கரப்பந்துப்போட்டியிலும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் யாழ்ப்பாண மாவட்ட அணியினரை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like