பட்டதாரிகளை இணைத்துக்கொண்டு ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்து கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை மே மாதம் 5 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1 இற்கு பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சை முன்னதாகவே நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் அதன் பெறுபேறுகளுக்கமைய சான்றிதழ்களை பரிசீலிக்குமுகமாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நேர்முகப்பரீட்சைக்கு தகுதியான பட்டதாரிகளை அழைத்துள்ளது.

திருகோணமலை உட்துறை முகவீதியிலுள்ள கிழக்கு மாகாணசபை பணிமனையிலுள்ள கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகத்தில் இந்நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் டபிள்யு.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சகல ஆவணங்களினதும் மூலப்பிரதிகளும் நிழற்படப்பிரதிகளும் கொண்டுவருதல் அவசியம் எனவும், அத்துடன் அன்றே பிரயோகப்பரீட்சையும் நடைபெறவுள்ளதால் 5 நிமிடநேர குறிப்பிட்ட பாடத்திற்கான வாய்மொழிப்பரீட்சைக்கும் தயாராக வருதல் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்காதவிடத்து பிறிதொரு நேர்முகப்பரீட்சை நடாத்தப்படமாட்டாது எனவும் செயலாளர் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like