குடும்பத் தகராறில் பெண் உள்பட 3 பேர் பலி: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 3 பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Unterseen நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை நேரத்தில் பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் பெண் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ ஹெலிகொப்டருக்கு தகவல் கொடுத்தப் பிறகு மூவரையும் காப்பாற்ற பொலிசார் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தில் ஆண் மற்றும் ஒரு பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு வந்த ஹெலிகொப்டரில் மற்றொரு ஆண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மூன்றாவது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் குடியிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும், இச்சம்பத்தில் மர்ம நபர்களின் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை என்பதால் இது குடும்பத் தகராறாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like