கொழும்பு சென்ற 19 வயது இளைஞர் மாயம்? காணாமல் பரிதவிக்கும் பாட்டி

வேலை தேடி கொழும்புக்கு சென்ற 19வயதுச் இளைஞரை 4மாத காலமாக காணவில்லை என அவரது பாட்டி பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாறை வளத்தாப்பிட்டி, பிள்ளையார் வீதியைச் சேர்ந்த இராசசிங்கம் லஸ்தகுமார்(19) கடந்த ஆண்டு மார்கழி மாதம் 15 ஆம் திகதி வீட்டை விட்டு கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பீக்காமன்ட் யமுனபுர, கடுவலை, கொழும்பு என்ற இடத்திற்கு தனது அயலவருடன் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அங்கு சென்று இரண்டு வாரங்கள் தனது சித்தியுடன் தொடர்பு கொண்டு தான் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். இரண்டு வாரங்களின் பின்னர் வீட்டாருடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்தவில்லை.

இது பற்றி இவரை அழைத்துச் சென்ற வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் தகவல் கேட்டால், இவர் வேலையை விட்டு விட்டு தனது ஊரிற்கு செல்வதாக கூறிச் சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவன் குறித்து அவரது பாட்டி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முறைப்பாடுகள் பதிவு செய்தும் தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று மனித அபிவிருத்தி தாபனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனது பேரனை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறும் குறித்த பாட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like