இராணுவத்தின் ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்?

இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில்,

இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வைத்திருக்க விடுமாறு கோரியுமே இராணுவத்தினரது ஒழுங்கமைப்பில் நாளை கிளிநொச்சியில் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு நாளை வரும்போது சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளது கணவனையும் அழைத்து வருமாறு போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கான அழைப்பையும் அறிவுறுத்தல் நினைவூட்டலையும் இன்றைய தினமும் தொலைபேசியூடாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் பொதுமக்களது சிவில் அமைப்புக்களில் தேவையற்ற இராணுவத் தலையீடு தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறித்து இம்முறையும் ஜெனீவாவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள முன்பள்ளிகளில் இராணுவத் தலையீடு அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் வடமாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் இராணுவம் தமது ஆமி ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஏதோ கற்பிக்க முற்பட்ட போதும் அதற்குக் கிழம்பிய கடும் எதிர்ப்புக் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காணாமல் போனோரது உறவினர்கள், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரி மற்றும் பட்டதாரிகள் எனப் பலரும் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக எவரும் போராடவில்லை வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக நீங்கள் போராடுங்கள் அதற்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு என போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய முன்பள்ளிகளை தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டமைப்பின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சியாக நாளை இராணுவத்தினரது ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டம் நடைபெறவுள்ளது.

You might also like