வவுனியாவில் கிறிஸ்மஸ் தினத்தில் ஆலயத்திற்குச் செல்லும் பாதையை கிராமசேவையாளர் தடை செய்துள்ளார். ஆலய சபையின் பிஷப் தெரிவிப்பு

வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையினை அப்பகுதி கிராமசேவையாளர் கட்டையிட்டு அடைத்துள்ளதாகவும் அப்பகுதியால் ஆலயத்திற்கு செல்ல முடியாதுள்ளதாகவும் ஆலய சபையின் பிஷப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 20.12.2016 அன்று சிதம்பரபுரம் பகுதியிலுள்ள தமது ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியினை மறித்து ஆலயத்திற்கு பொதுமக்கள்; செல்ல வழிவிடாது கட்டையினை வீதியின் நடுவே போடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பகுதியிலிருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது ஆலயத்திற்கு கிறிஸ்மஸ் விஷேட ஆராதனைக்குச் செல்லும் மக்களை செல்லவிடாது தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் கடந்த 25வருடங்களுக்கு மேலாக இவ் ஆலயத்தினை வைத்து இப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும், 25வருடங்களாக இப்பாதையினை பயன்படுத்தி இருநூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் தமது ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்து செல்வதாகவும் கிறிஸ்மஸ் புத்தாண்டில் இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதுடன் இந்நடவடிக்கையினை இப்பகுதியிலுள்ள கிராமசேவையாளர் துணை நின்று செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இப்பகுதியிலுள்ள பொதுமக்கயளிடம் வினவியபோது, கடந்த 15ஆம் திகதிக்கு முன்னர் தமது எல்லைகளிலுள்ள வீதியினை அடைத்துவிடுமாறு இப்பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் கிராமசேவையாளர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதற்கு அமைவாகவே தம்மால் கடந்த 20ஆம் திகதி குறித்த பகுதியினை அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இப்பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் கிராமசேவையாளருக்கு தொலைபேசி அழைப்பினைமேற்கொண்போதும் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவையாளர் அலுவலக நேரத்தில் மட்டுமே தொலைபேசி பயன்பாட்டில் வைத்திருப்பதாகவும் அலுவலகத்திலிருந்து சென்றால் தனது தொலைபேசியினை நிறுத்திவைத்துவிடுவதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

You might also like