வவுனியாவில் சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி! நோர்வே பிரஜை கைது

வவுனியாவில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சி செய்த நோர்வே பிரஜாவுரிமை பெற்ற இளைஞனும், சிறுமியின் தாயும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று முன்தினம் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் நின்ற 12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக நோர்வே பிரஜாவுரிமை பெற்ற 28 வயது இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினமிரவு கைது செய்யப்பட்டார்.

நோர்வேயில் இருந்து வந்த நிலையில் வவுனியாவில் தங்கியிருக்கும் குறித்த இளைஞர், சிறுமியின் தாயாருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவ்வீட்டிற்கு சென்று வருபவராகும். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் குறித்த சிறுமி தனிமையில் இருந்த சமயம் பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சிறுமி, தனது உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் சகோதரி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த 28 வயது இளைஞனையும், சிறுமியின் 41 வயது தாயையும் கைது செய்தனர்.

குறித்த இருவரையும் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like