சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கிளிநொச்சியில் போராட்டத்தில் குதிப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் அவர்களின் உறவினர்களும் இணைந்து போராட்டம் ஒன்றை சற்றுமுன்னர் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது விவசாய நிலங்களை பறிக்க வேண்டாம் எனக் கோரியும், சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களை வடமாகாணசபைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என கோரியும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் அவர்களின் உறவினர்களும் பல சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்விக்கொள்கைகளுக்கு மாறாக முன்பள்ளிகளை சிவில்பாதுகாப்புத் திணைக்களம் நிர்வகித்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த முன்பள்ளிக்கட்டமைப்பை வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவேண்டுமென பல்வேறு தரப்புக்களாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுடன் வடமாகாண சபையிலும் இது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் அமைந்துள்ள காணிகளை சிவில்பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்ககோரியும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தங்களின் கோரிக்கை கடித்தையும் கையளித்துள்ளனர்.
அரசே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணிகளை பறிக்காதே, பறிக்காதே பறிக்காதே விவசாய நிலங்களை பறிக்காதே, அகற்றாதே அகற்றாதே சிவில் பாதுக்காப்புத் திணைக்களத்தை வட மாகாணத்தை விட்டு அகற்றாதே போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாரு மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்னாள் பேராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றார்கள் எனவே அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும்.
அத்துடன், இங்கு பணியாற்றுகின்ற அனைவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் யுத்தப் பாதிப்புக்களை முழுமையாக எதிர்கொண்டவர்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் காணிகளில் ஒன்று வட்டக்கச்சி அரச பண்ணைக்குரிய காணியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.