பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பாலியல் சம்பந்தமான நோய்களுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருவோரில் பாடசாலை மாணவ, மாணவிகளும் இருப்பதாக பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் பிரதான மருத்துவ அதிகாரி நிஹால் எதிரிசிங்க கூறியுள்ளார்.

இதனால், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக பெற்றோர் பருவ வயதில் இருக்கும் தமது பிள்ளைகள் குறித்தும், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த தவறினால், நிலைமை மேலும் மோசமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற பாலியல் சம்பந்தமான நோய்கள் தடுப்பு பிரிவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவர் எதிரிசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் நோய்கள் தொற்றியுள்ளதா என்பதை பரிசோதித்து அறியவும் அந்த நோய்களுக்கு சிகிச்சை பெறவும் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வாறு சிகிச்சைக்கு வந்தவர்களில் ஆயிரத்து 560 பேருக்கு பாலியல் நோய்கள் தொற்றியிருந்தன.

ஹர்பீஸ், கோனோரியா, சீபிலிஸ் ஆகிய பாலியல் நோய்களுடன் சிறுநீர் குழாய், கர்ப்பபை நோய்களுடன் கூடிய நோயாளிகள் இவர்களில் அடங்குகின்றனர்.

தற்போது பாலியல் நோய் பரவியுள்ளவர்களின் எண்ணிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இந்த நோய்கள் பரவக் கூடும்.

இது சம்பந்தமாக பாடசாலை பிரதானிகள், மாணவ, மாணவிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிஹால் எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

You might also like