அமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயம்
புத்தளத்தில் கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் மகன் உட்பட குழுவினர் பயணித்த கெப் வண்டியே மோதுண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நேற்று மாலை ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ மஹஉஸ்வெவ ஏரிக்கு அருகில் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இகினிமிபிட்டிய பலுகொல்ல வீதியில் இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தாய் தந்தை, 7 வயது மகள் மற்றும் 4 வயதுடைய மகள் ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் குறித்த பெண் 6 மாத கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் நால்வருக்கும் கால் எலும்புகள் உடைந்து படுகாயமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாகவும், அதிக வேகத்தில் பயணித்த கெப் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டமையினால், மோட்டார் சைக்கிளில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அனுஷ்க பிரியதர்ஷன என்பவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டி இராஜாங்க அமைச்சரின் அமைச்சிற்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.